ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே நேருக்கு நேராக அவரை விமர்சித்த ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான்!
தலைவர் ரஜினிகாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சு!
திடீரென ஜெயலலிதா பக்கம் திரும்பி பாட்ஷா ஸ்டைலில் விரலை சொடுக்கிக்கொண்டு படபடவென பேச ஆரம்பித்தார் தலைவர் ரஜினிகாந்த்.
தலைவர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராகப் பேசிய இந்த வீடியோ வந்து எங்கேயுமே இருக்க வாய்ப்பில்லை. யூடியூப் போன்ற சோசியல் மீடியாக்கள் எங்கேயுமே இந்த வீடியோ இல்லை.
ஆனால், அந்த விழாவில் தலைவர் என்ன பேசினார் என்பதை அன்றைய தேதிக்கு, அதாவது 30/4/1995-ல் ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள். அந்த கட்டுரையைப் படிக்கும்போது நமக்கு அப்படியே கூஸ்பம்ப் (Goosebumps) மொமெண்ட்டாக இருக்கிறது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தகவல்.
தலைவர் அந்த விழாவில் என்ன பேசினார் என்றால்:
சிவாஜி கணேசன் கௌரவிப்பு விழா
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவ்வாலியர் விருது வழங்கும் விழா. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரைப்பட உலகமே திரண்டிருந்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமை ஏற்றிருந்தார். வெள்ளை சட்டை, கருப்பு ஜீன்ஸ் சகிதம் கண்ணாடி அணிந்து வந்தார் தலைவர் ரஜினிகாந்த். விழா மேடையில் சிவாஜி ஏறியதும் ஓடிப்போய் அவர் காலை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.
சிவாஜி, ஜெயலலிதா எல்லோரும் பேசி முடித்த பிறகு நன்றியுரை சொல்ல வந்த சூப்பர் ஸ்டார், 20 நிமிடங்கள் கூட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பது நிஜம். ஜெயலலிதாவுக்கே இந்த விழா ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கும். அவர் காலில் விழுந்து யாரும் வணங்கவில்லை. அவரைப் பற்றிய புகழுரைகளிலும் குறிப்பிடும்படியான வசீகரம் இல்லை. அங்கு எழுந்த கரவொலிகளும் கூட எம்.ஜி.ஆர். பெயரை சிலர் நினைவு கூர்ந்த போதுதான்.
மேடையில் ரஜினிகாந்தின் அதிரடி
வாழ்த்திப் பேசுகிற வரிசையில் முதலில் தலைவர் ரஜினியின் பெயர்தான் இருந்தது. "நான் நன்றியுரை சொல்கிறேன்" என்று தானே அதை மாற்றிக் கொண்டார் தலைவர் ரஜினிகாந்த். ஆட்சிக்கு வந்த பிறகு, தான் இருக்கும் ஒரு மேடையிலேயே இப்படி ஒரு தாக்குதலை ஜெயலலிதா சந்தித்ததில்லை. அசந்து போய் உட்கார்ந்திருந்தார் ஜெயலலிதா.
இவர்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்று விழாக்குழுவினர் தந்த பட்டியலை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, அந்த நன்றியுரையையே தன் இஷ்டத்திற்கு மாற்றிக் கொண்டார் தலைவர் ரஜினிகாந்த். அவரது பேச்சில் வார்த்தைகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி உடைந்து விழுந்தன. திடீரென ஜெயலலிதா பக்கம் திரும்பி பாட்ஷா ஸ்டைலில் விரலை சொடுக்கிக்கொண்டு படபடவென பேச ஆரம்பித்தார்:
"நான் இப்போ ரொம்ப டென்ஷனா இருக்கேன். நீங்க திறந்து வச்சீங்களே ஃபிலிம் சிட்டி, அப்போவே சிவாஜி சாரைக் கௌரவிச்சிருக்கணும். நீங்க அதை செய்யல, அவரை மதிக்கல. அந்த விழா மேடையில அவரை உட்கார வச்சு கௌரவம் பண்ணி இருக்கணும். அதை செய்யாதது தப்பு. தப்பு பண்றது மனித இயல்பு, தப்பை திருத்திக்கிறது மனிதத்தனம்."
அரங்கில் எழுந்த வரவேற்பு
தலைவர் ரஜினி அப்படிச் சொல்லவும், அந்த அரங்கம் முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பேச்சு மேலும் சூடு பிடித்தது:
"அப்போ பண்ண தப்ப இப்போ சரி பண்ணிட்டீங்க. இப்படி ஒரு பிரம்மாண்டமான விழா நடத்த உதவி பண்ணி, வந்து கலந்துகிட்டு சரி பண்ணிட்டீங்க," என்றவர், "தப்பு யார் பண்ணாலும் தப்புன்னு சொல்லுவேன். அது ஒரு குடிமகனா என்னோட உரிமை. அதுவும் ஒரு நடிகன் என்ற முறையில அந்த உரிமை எனக்கு நிறையவே இருக்கு" என்று சொல்ல, கைதட்டல்கள் அங்கிருந்த அரங்கம் முழுவதும் பரவியது.
ஜனத்திரளை சலனம் இல்லாமல் ஊடுருவிப் பார்த்தபடி இருந்தார் முதல்வர் ஜெயலலிதா.
தான் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், சினிமாவில் ஒரு நடிகராக இருந்தபோதே இப்படி ஜெயலலிதா அவர்களை எதிர்த்து ஒரு நடிகர் பேசியிருக்கிறார் என்றால், அது தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டும்தான்.

கருத்துகள் இல்லை