திடீரென்று சூப்பர்ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய சசிகலா!
அரசியல் என்ற காலண்டரில் கடைசி பக்கம் என்பதே கிடையாது!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று தமிழகமே எதிர்பார்த்த நிலையில், சூழ்நிலையை கருதி அவர் அரசியலுக்கு வரவில்லை, வரமுடியவில்லை என்று அறிவித்து விட்டார். இதனால் அவரின் ரசிகர்களும் கூட மிகவும் சோர்வடைந்து விட்டனர். ஆனால் ரஜினியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அனைவரும் இந்த சம்பவத்தை கடந்து சென்றனர். அதன் பிறகு அண்ணாத்த படத்தை ரசிகர்கள் வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள். ஏனென்றால் ரஜினியை நாம் நேசிக்க துவங்கியதற்கு காரணம்? அவர் அரசியலுக்கு வருவார், வந்து நம்மை வாழவைப்பார் என்று அவரை ரசிக்க துவங்கவில்லை. அவரின் படங்களில் அவர் காட்டும் ஸ்டைல், நடிப்பு, அவரின் கண்கள், முகம் இப்படி ஏதோ ஒன்றாலோ, அல்லது இவை அனைத்தும் சேர்ந்தோ ரஜினியை நம்மை ரசிக்கவைத்தது.
ஆனால் அவர் அரசியலுக்கு வருவார் என்று என்று எண்ணி யாருமே ரசிகர்கள் ஆகவில்லை. அப்படி யாராவது ஆகியிருந்தால் அவர்கள் ரசிகர்களே இல்லை. இவ்வாறு ரஜினிகாந்த் என்ற திரை ஆளுமைக்கு தான் ரசிகர்கள் ஆனோம். ஆனால் நிஜவாழ்க்கையிலும் அவர் நடந்து கொள்ளும் விதம் அனைவைரயும் திரும்பிப் பார்க்க வைத்தது. அவரை நிறைய பேர் பின் தொடர ஆரம்பித்தார்கள். அவர் பொது வெளியில் உண்மையை பேசத் தயங்குவதில்லை. அதே போல தனது தோற்றத்திற்கும் முலாம் பூசுவதில்லை. இந்த வெளிப்படையான குணத்தை பார்க்கும் போது, திரையில் எப்படி அவர் நம்மை இழுக்கிறாரோ, அதேபோல் தான் நிஜவாழ்க்கையிலும் நம்மை ரசிக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் இவரது நேர்மை, யாருக்கும் பயப்பாடாமல் தைரியமாக பேசுவது போன்ற விஷயங்களையும் மக்களும் ரசிகர்களும் ரசிக்க துவங்கினார்கள். அப்போது தான் இவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்குமே! அரசியல்வாதிகளுக்கு தேவையான அத்தனை நல்ல குணங்களும் ரஜினிகாந்துக்கு இருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் ஒருசிலர் இந்த குணத்தை தான் அரசியலுக்கு ஒத்துவராது என்றும் கூறினார்கள். அவர்கள் யாரென்று பார்த்தால் நிகழ்கால அரசியல்வாதிகள் தான். ரசிகர்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்ற உடனேயே செம கொண்டாட்டம் போட்டனர். ஆனால் சிலர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்று தடுத்தனர். இந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.
சசிகலா ரஜினிகாந்த் சந்திப்பு
ஆனால் தலைவரைப் பொறுத்தவரை ஒரு விஷயம் மட்டும் உண்மை. அரசியல் என்ற காலண்டரில் கடைசி பக்கம் என்பதே கிடையாது என்ற வாசகம் மட்டும் அவருக்கு மிகச்சரியாக பொருந்தும். ஏனென்றால் அவர் நேரடியாக அரசியல் களத்தில் இல்லாமல் இருந்தாலும் கூட ஆரம்பம் தொட்டே இன்று வரை அவர் சம்பந்தப்படாமல் அரசியல் இல்லை என்பது போல தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்போதும் அது போலதான் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது தலைவரை அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்து பேசியிருக்கிறார் விகே சசிகலா. இந்த சந்திப்பு மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. நேற்று முன்தினம் போயஸ்கார்டனுக்கு வந்துள்ளார் சசிகலா.
அங்குள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் பேசியுள்ளார். ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் இருந்துள்ளார். இந்த செய்தி, நேற்று முன்தினம் யாருக்குமே தெரியவில்லை. ஆனால் நேற்று தான் இந்த செய்தி வெளியானது. நேற்று முதலில் இந்த புகைப்படம் வெளியான போது, இப்போது தான் ரஜினியை சசிகலா சந்தித்து பேசிக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னார்கள். பிறகு தான் சசிகலா தரப்பிலிருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அப்போது தான் அந்த அறிக்கையில் நேற்று சந்தித்தார் என்று போட்டிருந்தது. அதன் பிறகு தான் எல்லோருக்கும் இந்த செய்தி பரவ ஆரம்பித்தது. பேசு பொருளாகவும் மாறியது.
ஏன்? சசிகலா ரஜினியை சந்தித்து பேசினார் என்பது பற்றி பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது என்னவென்றால், சூப்பர்ஸ்டார் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் அவரின் உடல் நலம் பற்றி விசாரிக்க தான் சசிகலா ரஜினியை சந்தித்து பேசினார் என்று கூறியுள்ளார்கள். மேலும் தலைவருக்கு சமீபத்தில் இந்திய சினிமா துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டது அல்லவா? அதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவும் அவர் ரஜினியை சந்தித்து பேசினார் என்றும் கூறினார்கள்.
ரஜினியை சுற்றியே அரசியல்!
ஆனால் யார் என்ன சொன்னாலும், தலைவரை அரசியல் சார்ந்த ஒரு நபர் சந்தித்தாலே வழக்கம் போல் ஆரம்பித்து விடுவார்கள் அல்லவா? அதேதான் இப்போதும் நடந்துள்ளது. அவர் என்ன நோக்கத்தோடு ரஜினியை சந்தித்தார் என்று சொன்ன பிறகும் கூட, அவர் நோக்கம் எதுவாக இருக்கும் என்று விவாதங்கள் நடக்கின்றன. ஏற்கனவே சசிகலா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்தபோது ரஜினிகாந்த் நலம் விசாரித்தார் என்று தினகரன் ஒரு பேட்டியில் சொன்னார். அது மாதிரி சசிகலாவும் தலைவர் வீட்டுக்கு வந்து நலம் விசாரித்திருக்கலாம். இதற்கு எதற்காக அரசியல் சாயம் பூசவேண்டும்?
இப்படி தான் கிட்டத்தட்ட 30 வருடங்களாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ரஜினி அரசியல் பேசியது கொஞ்ச இடங்களில் தான். ஆனால் அவரை வைத்து இவர்கள் அரசியல் பேசியது எண்ணிலடங்கா இடங்களில். ரஜினிகாந்துக்கு உண்மையிலேயே அரசியல் ஆசை என்பதே இல்லை. பதவி ஆசை என்பதும் இல்லை. இதை மூப்பனாரே ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறினார். நாமே சற்று யோசித்துப் பார்த்தால் நன்கு புரியும். 1996 சமயத்தில் தேடி வந்த பதவியை ரஜினி ஏற்றுக்கொள்ள வில்லை. அந்த சமயத்தில் அனைத்து அரசியல் விமர்சகர்களும் சொன்னார்கள். சோ ராமசாமி உட்பட. ஆனால் தலைவருக்கு அந்த என்னம் துளியும் இல்லாததால் மறுத்துவிட்டார்.
அந்த ஆசை இருந்து இருந்தால் ரஜினிகாந்த் அப்போதே அந்த களத்தில் குதித்திருப்பார் இல்லையா? நீங்கள் நினைக்கலாம். அப்புறம் எதற்காக இப்போது மட்டும் வருகிறேன் என்று சொன்னார் என்று. அவர் வருகிறேன் என்று சொன்னதெல்லாம் உண்மை தான். அப்போது கூட அவர் நான் தான் முதல்வர் வேட்பாளராக நிற்கப்போகிறேன் என்று சொல்லவில்லை. முதல்வர் வேட்பாளருக்கு படித்த நல்ல ஒரு இளைஞரை நிறுத்துவேன் என்று தானே சொன்னார். அதன் மூலம் நமக்கு அவருக்கு பதவி மேல் துளியும் ஆசையில்லை என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால் சிலர் இது புரியாமல் ரஜினியை விமர்சிக்கிறார்கள். விமர்சனங்கள் என்பது எல்லோருக்கும் பொதுவான விஷயம்தான்.
அதுவும் பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டால் அது சற்று அதிகமாகவே வரும். ஆனால் தேவையில்லாமல் ரஜினியை சுற்றியே விமர்சிப்பது ஏற்படையது அல்ல. ரஜினிகாந்த் எவ்வளவோ விலகியிருந்தும் அரசியல் அவரை விட்டு விலக மறுக்கிறது. சுற்றி இருப்பவர்களும் கூட அவரை உடன் சார்ந்தே அரசியலை கொண்டு செல்கின்றனர். அதற்கு சாட்சிதான் இந்த சசிகலா சந்திப்பை கூட அரசியல் சார்ந்து பேசுவது. நமக்கு ஒரு விஷயம் தெரியாது என்கிற பட்சத்தில் அதைப்பற்றி பேசாமல் இருப்பது நல்லது. ஆனால் அதற்காக இருக்குமோ? அல்லது இதற்காக இருக்குமோ? என்று நாமாகவே கற்பனை செய்து கொண்டு பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
ரஜினிகாந்த் எனும் நான்!
இன்னொரு முக்கியமான விஷயம். ரஜினி அன்றே தெளிவாக கூறிவிட்டார். இனி எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று. அதன் மூலமாகவே நாம் நன்றாக புரிந்து கொள்ள முடியும். அவரால் ஏதாவது இந்த தமிழக மக்களுக்கு செய்யமுடியுமா? என்று பார்த்தார். ஆனால் காலம் வேறொரு விஷயத்தை வைத்துள்ளது. இந்த மாதிரி உலகமே மாறும் என்று யாரு மே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் என்ன செய்வது. இதுபோன்ற எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களுக்கு அவர் பொறுப்பாக முடியாது. இருந்தாலும் அவரே அதற்காக பொறுப்பேற்று மன்னிப்பும் கேட்டார். அந்த மூன்று பக்க அறிக்கையை எழுதும் போது இந்த விஷயதை சொல்லும் போது அவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
நாலு பேர் நாலு விதமாக பேசுவார் என்பதற்காக, என்கூட வருபவர்களை சிக்கலில் மாட்டிவிட விரும்பவில்லை என்கிறார். கண்டிப்பாக அவருக்கே நன்றாக தெரிந்து இருக்கும். இப்போது வரவில்லை என்று சொன்னால் என்னென்ன பேசுவார்கள் என்று. ஆனால் அவரை என்ன பேசினாலும் பரவாயில்லை. ஆனால் என்னை நம்பி வருபவர்கள் நல்லா இருக்கவேண்டும். என்ற அந்த நல்ல குணம் இருக்கிறதே அது தான் தலைவர். ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் என்றுமே மகிழ்ச்சியாகவும் மனநிம்மதியுடனும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் எண்ணமாக இருக்கும். முதலில் அவர்தான் முக்கியம் அதன் பிறகு தான் எல்லாமே. அரசியலும் அப்படித்தான்.
அதனால் தான் நான் சொல்கிறேன். இனி வரும் காலங்களிலும் கூட, தலைவரை யாரேனும் ஒரு அரசியல்வாதி சந்தித்து பேசினார் என்றாலும் அப்போதும் கூட இப்படித்தான் பேசுவார்கள். ரஜினியே அரசியலை விட்டு விலக நினைத்தாலும் அரசியல் அவரை விடப்போவதில்லை. அதனால் தான் ஆரம்பத்தில் அந்த வசனத்தை சொன்னேன். அதாவது
அரசியல் என்ற காலண்டரில் கடைசி பக்கம் என்பதே கிடையாது என்று!
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது இந்த தமிழக மக்களும் சரி தமிழக அரசியலும் சரி ரஜினிகாந்த் எனும் நான் என்ற வார்த்தையை கேட்க முடியாமலே போய்விட்டது. இது கண்டிப்பாக ரஜினிகாந்துக்கு எந்த வித ஏமாற்றமும் அல்ல. ஏனென்றால் அவர் இதை விரும்பவில்லை. ஆனால் ஒரு நல்ல மனிதர் அரசியலுக்கு தேவை என்று நினைப்பவர்கள் எல்லோருக்குமே இது ஏமாற்றம் தான்.

கருத்துகள் இல்லை