ரஜினி என்ற காந்தம்! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் சிறப்பு கட்டுரை!
மதிப்பிற்குரிய சூப்பர்ஸ்டார்!
இந்த கட்டுரையை ஆவலாக வாசிக்க வந்திருக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கம். நான் செல்வா. மிகமிக சாதாரணமானவன். இந்த கட்டுரையில் நான் கூறியிருப்பது என்னவென்றால், எனக்குள் எப்படி ரஜினி நுழைந்தார், அதன் பிறகு எப்படி நான் மாறினேன், ரஜினி அப்படி எனக்கு என்ன கற்றுக்கொடுத்தார், நான் இப்போது எப்படி இருக்கிறேன் என்பதை தான் எனக்கு நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களுடன் இந்த கட்டுரையை எழுதியிருக்கிறேன். அதனால் முழுக்க முழுக்க இந்த பதிவில் நானும் தலைவரும் மட்டுமே பயணிக்க போகிறோம். நீங்களும் இதைப் படிப்பதன் மூலமாக எங்களுடன் பயணிக்க விருப்பம் இருந்தால் வாருங்கள். பயணிப்போம்.
எனக்கு இப்போது 29 வயது ஆகிறது.
எனக்கு ஐந்து வயது இருக்கும் போதே தலைவர் என்னுள் நுழைந்து விட்டார். ஆனால் அப்போது எனக்கு அதெல்லாம் தெரியாது. என் அம்மா சொல்லுவாங்க, ஒன்னாவது படிக்கும் போதே, ஒரு குட்டி சைக்கிள்ல ஒரு தூக்கு பாத்திரத்தை எடுத்து மாட்டிக்கொண்டு, "வந்தேன் டா பால்காரன்" என்ற பாட்டு பாடிக்கிட்டே சுத்துவேன் என்று. அதனால் அப்போதே நான் தலைவரின் ரசிகனாக இருந்துள்ளேன் என்று தெரிந்துகொண்டேன். நான் முதன் முதலாக பார்த்த தலைவர் படம் என்றால் அது அண்ணாமலை தான். சின்ன வயசுல அந்த படத்தை பார்த்த நியாபகம் இன்னும் மனதில் இருக்கிறது. அதன் பிறகு எப்படி அவர் ரசிகன் ஆனேன் என்று தெரியவில்லை. ஒருவேளை, எனக்கு அந்தந்த துறைசார்ந்து இருப்பவர்களில் நம்பர் ஒன் இடத்தில் யார் இருக்கிறார்களோ அவரை தான் பிடிக்கும். உதாரணமாக கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர். டபிள்யூ டபிள்யூ வில் அண்டர்டேகர். இது போன்று நம்பர் ஆட்களைதான் பிடிக்கும்.
இது போலதான். சினிமாவில் தலைவர் தான் நம்பர் ஒன் என்று எனக்கு பிடித்துவிட்டதா என்னவோ தெரியாது! ஆனால் சச்சினும் அண்டர்டேகரும் கூட ஒரு கட்டத்தில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைக்க தவறிவிட்டார்கள். ஆனால் ரஜினியோ இன்னமும் அதை தக்கவைத்துள்ளார். அவருக்கு வயது எழுபத்தி இரண்டு என்று சொன்னால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வயதிலும் இப்படி ஒருவர் நடிக்க முடியுமா? நடித்தாலும் பேர் வாங்க முடியுமா? பேர் வாங்கினாலும் உலகம் முழுவதும் வசூல் மழை நிகழ்த்த முடியுமா? கட்டாயாமாக இது வேறொருவருக்கு சாத்தியமில்லை. ஆனால் அவர் ரஜினி. முடியாததை முடித்துக்காட்டுபவர் தான் இந்த ரஜினிகாந்த்.
நான் போட்ட சவால்!
நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். எனக்கு அப்போதெல்லாம் யாராவது என்னை இன்சல்ட் செய்து விட்டால், அப்படி எந்த விஷயத்திற்காக இன்சல்ட் செய்யப்பட்டேனோ, அதை விட ஒரு படி மேல வரவேண்டும் என்று நினைப்பேன். (இன்று வரை அப்படி தான்). அந்த பள்ளியில் நடந்த அந்த சம்பவம் என்னை அந்த சபதம் போடவைத்தது. எங்கள் பக்கத்து ஊரில் திருவிழா. அந்த திருவிழாவுக்கு சென்ற என் நண்பன் ஒரு வீடியோ கேம் வாங்கிவந்தான். அதை பள்ளிக்கும் எடுத்து வந்தான். அப்போதெல்லாம் அது புதியது. நானெல்லாம் அதற்கு முன் அதனை பார்த்தது கூட கிடையாது. அவன் அந்த வீடியோ கேமில் விளையாண்டு காட்டினான். பக்கத்தில் இருந்த நான் எனக்கு கொஞ்சம் நேரம் குடுடா விளையாடிவிட்டு தருகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவன் என்னை கிண்டல் செய்து விட்டு தரமுடியாது என்று கூறிவிட்டான்.
எனக்கு அது மிகுந்த வருத்தத்தை தந்தது. அது மட்டுமல்லாது, அந்த இடத்தில் அவனிடம் ஒரு சவாலும் விட வேண்டும் என்று என் மனது சொல்லியது. உடனே சவாலும் விட்டேன். இதே வீடியோ கேம் நாளைக்கு ஸ்கூலுக்கு வரும்போது நான் வாங்கிட்டு தான் வருவேன் என்று. பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு ஓடோடி சென்றேன். என் அப்பாவிடம் அடம் பிடித்து பணம் வாங்கினேன். நேராக பக்கத்து ஊர் திருவிழாவுக்கு நடந்தே சென்றேன். இல்லை இல்லை ஓடியே சென்றேன். என் மைன்ட்ல முழுவதும் அந்த வீடியோ கேம் மட்டும் தான் தெரிந்தது. ரோட்டில் என்ன வண்டி வருகிறது என்பது கூட எனக்கு தெரியவில்லை. எப்படியோ அந்த கோவில் திருவிழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டேன்.
சாமி கூட கும்பிடவில்லை. நேராக கடைத்தெரு இருக்கும் பகுதிக்கு விரைந்தேன். அங்கு எத்தனையோ விளையாட்டு பொருட்கள் இருந்தது. ஆனால் என் கண்கள் வீடியோ கேமை மட்டுமே தேடியது. மற்ற பொருட்கள் அனைத்துமே பிளர் எபெக்ட்டில் தெரிவது போலதான் இருந்தது. ஒருவழியாக நான் தேடி வந்த வீடியோ கேம் என் கண்ணில் பட்டது. கடைக்காரரிடம் எவ்வளவு என்று கேட்க அவர் விலையை சொன்னார். என்னிடம் அவர் சொன்னதை விட பத்து ரூபாய் கம்மியாக தான் இருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சரி அந்த கடைக்காரர்கிட்டயே குறைத்து கேட்டுப்பார்ப்போம் என்று அவரிடம் அண்ணா என்னிடம் இவ்வளவு தான் இருக்கிறது என்றேன்.
ரஜினியை பார்த்துவிட்டேன்!
அதற்கு அவர் பேட்டரி இல்லாமல் தான் வரும் பரவாயில்லையா? என்று கேட்டார். பேட்டரி இல்லாமலா என்று நான் சற்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே சரி விடு உனக்கு பேட்டரியோடவே தருகிறேன் என்றார். எனக்கு அப்போது தான் மிகப்பெரிய சந்தோஷம் கிடைத்தது. பிளர் எபெக்ட்டில் இருந்த பார்வை சரியானது. அவர் பேட்டரியை பொருத்திக்கொண்டிருந்த நேரத்தில் பக்கத்து கடைக்கு எனது கண்கள் போனது. அங்கு பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சரியம் கலந்த திக்கென்ற உணர்வு ஏற்பட்டது. அதை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை. நான் அப்படி ஒரு காட்சியை தான் அந்த பக்கத்து கடையில் பார்த்தேன். அப்படி என்னத்த தான் பார்த்த என்று தானே யோசிக்குறீங்க?
அங்கே நான் பார்த்தது தலைவர் ரஜினிகாந்துடைய புகைப்படத்தை தான். அந்த கடையில் நிறைய நடிகர்களுடைய புகைப்படங்கள் விற்பனைக்கு இருந்தது. தலைவருடைய வித விதமான புகைப்படங்கள் அங்கு இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் கலந்த திக்கென்ற உணர்வு ஏற்பட்டது. ஆச்சரியம் தலைவர் படத்தை பார்த்ததும் வந்தது. எதற்காக திக்கென்ற உணர்வு வந்தது என்றால் என்னிடம் வேற பணம் ஏதும் இல்லை. தலைவரின் புகைப்படத்தை எப்படி வாங்குவது என்ற திக் தான் காரணம். இவ்வாறாக நான் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தான் தம்பி தம்பி என்ற குரல் கேட்டது. அவர் வேறுயாருமில்லை. நமது வீடியோ கேம் கடைக்காரர் தான்.
பேட்டரி போட்டாச்சு இந்தாப்பா என்று என்னிடம் கொடுக்கிறார். நான் சிலை போல நின்றுகொண்டிருந்தேன். அவர் கொஞ்சம் சத்தமாக இந்தாப்பா பிடி என்றார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு நிமிடம் யோசித்த நான், அந்த கடைக்காரரிடம் அண்ணா இந்த வீடியோ கேம் எனக்கு வேண்டாம் காசு தர்றீங்களா? என்று கேட்டேன். அதற்கு அந்த கடைக்காரர் கோபமடைந்து விட்டார். அதெல்லாம் முடியாது பேட்டரி எல்லாம் போட்டாச்சு. இனி இதை யாரும் வாங்கமாட்டார்கள். அதனால் இதை எடுத்துட்டு கிளம்பு என்று சொன்னார். எனக்கோ அதை வாங்கவும் மனசில்லை. வீட்டுக்கு போய் மறுபடியும் காசு கேட்டால் கொடுக்கவும் மாட்டார்கள். அதனால் என்ன செய்யலாம் என்று சற்று யோசித்துப் பார்த்தேன்.
நானும் ரஜினி ரசிகன்தான்!
பிறகு அந்த கடைக்காரரிடமே கெஞ்ச ஆரம்பித்தேன். அண்ணா அண்ணா ப்ளீஸ் அண்ணா எனக்கு பணம் கொடுத்துறுங்க அண்ணா என்றேன். முதலில் திட்டியவர் பிறகு ஏன் உனக்கு பணம் வேண்டும், நீதானே இந்த வீடியோ கேம் கேட்ட, இப்போது எதற்காக பணத்தை திருப்பி கேட்குற என்றார். நானும் கொஞ்சம் தயங்கி தயங்கி அவரிடம் பக்கத்தில் ரஜினி போட்டோ இருக்கிறது அண்ணா. அதை வாங்க வேண்டும் என்னிடம் வேறு காசு இல்லை. அதனால் தான் உங்களிடம் இந்த வீடியோ கேம் வேண்டாம் என்கிறேன். நான் முதலிலேயே ரஜினி போட்டாவை பார்த்திருந்தால் இந்த வீடியோ கேம் வாங்கியிருக்கவே மாட்டேன் அண்ணா. தயவு செய்து எனக்கு பணத்தை திருப்பி கொடுங்க அண்ணா என்றேன்.
உடனே பக்கத்து கடையை எட்டிப்பார்த்தவர், என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. என்னிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷத்தில் உதடுகள் தானாகவே புன்னகைத்தது. அவரிடம் நன்றி கூட சொல்லாமல் பணத்தை வாங்கிக்கொண்டு பக்கத்து கடைக்கு போக எத்தனித்தேன். அந்த கடைக்காரர் கூப்பிட்டார். அண்ணா சாரி அண்ணா. மறந்துவிட்டேன் ரொம்ப நன்றிங்க அண்ணா என்று சொல்லிவிட்டு கிளம்ப போனேன். அவர் மீண்டும் தம்பி என்று கூப்பிட்டார். என்ன அண்ணா என்று கேட்டேன். நான் எதற்காக உனக்கு பணத்தை திருப்பி தந்தேன் தெரியுமா? என்று கேட்டார். தெரியவில்லையே அண்ணா என்றேன்.
அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்... நானும் ரஜினி ரசிகன்தான்பா என்று. எனக்கோ சந்தோஷம் தாங்கமுடியவில்லை. சூப்பர் அண்ணா என்று சொல்லிவிட்டு அந்த போட்டோ கடைக்கு சென்றேன். அங்கே இருக்கும் எல்லா ரஜினி சார் போட்டோவையும் வாங்கவேண்டும் என்று ஆசையாகதான் இருந்தது. ஆனால் அவ்வளவு பணம் எங்கிட்ட இல்லையே. நான் வைத்திருந்த பணத்துக்கு 6 படம் கிடைக்கும் என்றார் அந்த கடைக்காரர். அதாவது சுவற்றில் ஒட்டும் புகைப்படம். பிறகு நான் தேர்வு செய்தேன். தர்மத்தின் தலைவன் படத்தில் வரும் ஒரு புகைப்படம். பாட்ஷா படத்தில் 2. மாணிக்கம் மற்றும் பாஷா. நிஜவாழ்க்கையில் தலைவர் படம் ஒன்று. அருணாச்சலம் படம் ஒன்று தளபதி பட ஸ்டில் ஒன்று என மொத்தம் 6 படம் வாங்கிக்கொண்டேன்.
பக்கத்து கடைக்காரரான (ரஜினி ரசிகர்) அண்ணாவிடமும் காண்பித்து விட்டு நேராக வீட்டுக்கு சென்றேன். சுவற்றில் எல்லா புகைப்படத்தையும் ஒட்டி வைத்தேன். அதற்காக அண்ணனிடம் திட்டும் வாங்கினேன். அவர் கமல் ரசிகன் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். போனேன் தலைவர் ஸ்டில் வாங்கினேன். சுவற்றில் ஒட்டினேன் சந்தோஷம் அடைந்தேன். எனக்கு எந்த விதத்திலும் ஒரு துளி கூட ஏமாற்றம் என்பதே ஏற்பட்டவில்லை! நான் வாங்குவதற்காக சென்ற வீடியோ கேமை வாங்கவில்லை என்பதற்காக. அதாவது நான் இப்போது ஒரு பைக் வாங்கலாம் என்று சென்றுவிட்டு கார் வாங்கிட்டு வந்தால் எந்த மாதிரியான மனநிலை இருக்குமோ அதுபோல் தான் என் மனநிலை இருந்தது.
ரஜினி ரசிகனுக்கு தோல்வியில்லை!
சரி எனக்கு எந்த கவலையும் இல்லை. மிகவும் சந்தோஷம் தான். ஆனால் அடுத்த நாள் பள்ளிக்கு செல்ல வேண்டுமே. அங்கே நண்பனிடம் சவால் விட்டேனே. நாளைக்கு வரும்போது வீடியோகேமோட தான் வருவேன் என்று. அதனால் அவனிடம் என்ன சொல்வது என்ற மனநிலை சற்று மனதின் ஓரத்தில் இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. நமது சந்தோஷத்திற்காக தான் நாம் வாழவேண்டும். எனக்கு அதில் மகிழ்ச்சி தான். நான் ஏன் அவனிடம் சவால் விட்டதற்காக வருந்தவேண்டும்.? அடுத்த நாள் பள்ளிக்கு சென்றேன். அவன் என்னிடம் வந்து என்னடா சவால் விட்டியே, வாங்கிட்டு வந்தியா என்று கேட்டான். நான் சொன்னேன். வாங்கிட்டு வந்தேன். ஆனால் வீடியோ கேம் அல்ல. இந்த உலகிலேயே விலை மதிப்புமிக்க ஒன்று என்று சொன்னேன்.
அப்படி என்ன வாங்கிட்டு வந்த, எனக்கு காட்டு பார்ப்போம் என்றான். அப்போது நான் அவனிடம் சொன்னது தான் ஹைலைட்டே! வீடியோ கேம் கேட்டதற்கு அவன் என்ன வார்த்தை சொன்னானோ, அதே வார்த்தையை தான் நானும் சொன்னேன். தலைவர் என்றுமே தன் ரசிகர்களை தோற்க விட்டதில்லை. இன்று வரை அந்த சம்பவம் எனக்கு பசுமையாகவே இருக்கிறது. தலைவர் மேல் அந்த அளவுக்கு பாசம் வைத்துவிட்டேன். என்னைப் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்கள் தலைவருக்கு இருக்கிறார்கள். ஒரு முறை பாசம் வச்சுட்டா, கடைசி வரைக்கும் பாசம் தான். சூப்பர்ஸ்டார் சொன்ன வார்த்தை தான். நமக்கு அவர் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் என்பதையும் தாண்டி, நம் குடும்பத்தில் ஒருவர். தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். என்றுமே சூப்பர்ஸ்டார் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவேண்டும்.

கருத்துகள் இல்லை