குருநாதர் பாலசந்தர் சொன்ன அறிவுரைகளை இன்றும் கடைபிடிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
குரு சிஷ்யன் அறிமுகம்!
இன்று உலகமே கொண்டாடும் சூப்பர்ஸ்டாராக வானளாவிய அளவுக்கு வளர்ந்து நிற்கும் ரஜினிகாந்த், தனது சினிமா வாழ்க்கையின் துவக்கத்தை கே பாலசந்தர் எனும் படைப்பாளியின் மூலமாக தான் தொடங்கினார். ஒருமுறை ரஜினி படித்த நடிப்பு பயிற்சி கல்லூரிக்கு வருகை புரிந்தார் இயக்குநர் கேபி. அவர் ஒரு நடுவராக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்தார். அப்போது தான் முதன்முறையாக கேபியை ரஜினி கண்டார். அவரிடம் தனது நடிப்பு திறமையை காண்பித்த ரஜினியிடம், எதாவது வாய்ப்பு வந்தால் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார் கேபி. அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து, கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் நடிப்பதற்காக ஒரு கேரக்டர் தேடினார். அப்போது தான் ரஜினியின் நியாபகம் கேபிக்கு வந்தது. இல்லை இல்லை சிவாஜி ராவ்வின் நியாபகம் வந்தது. அவரை வந்து பார்க்கும் படி சொல்லிஅனுப்பினார் கேபி.
பாலசந்தர் சாரிடம் இருந்து அழைப்பு வந்ததை ரஜினியால் நம்பவே முடியவில்லை. உடனடியாக கிளம்பி அவர் இடத்திற்கு சென்று நின்றுவிட்டார். அங்கே ஒரு பெஞ்சில் காத்திருந்தார். அந்த சமயத்தில் கமல்ஹாசன் அங்கு வந்து கேபியிடம் அபூர்வ ராகங்கள் படத்திற்கு ஆள் எடுக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். நான் நடிக்கிறேன் ப்ளீஸ் என்று கேபியிடம் சொன்னார். அதற்கு அவர், உனக்கு எல்லாம் கேரக்டர் போட்டாச்சு. இது வேற கேரக்டர். நீ போய் உன் வேலையை பாரு என்று சொல்ல, மீண்டும் கமல், அந்த கேரக்டரையும் நானே நடிக்கிறேனே என்று சொல்லியிருக்கிறார். இதனை கேட்ட பாலசந்தருக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. விட்டா கதாநாயகி வேடத்தையும் நீயே நடிக்கிறேன் என்று சொல்வாய் போல.
நீ போ, நீதான் இதில் ஹீரோ, அந்த கேரக்டர் சின்ன ரோல் தான். என்று கமலிடம் சொல்லி அவரை அனுப்பி வைத்தார் கேபி. பின்னர் வெளியே காத்திருந்த சிவாஜி ராவை கூப்பிட்டு சில எடுத்துக்காட்டுகளை சொல்லி நடிக்க சொன்னார். இவரும் நடித்துக் காண்பித்தார். கடைசியாக தமிழ் முதலில் கற்றுக்கொள் என்ற அறுவுரையோடு சிவாஜிராவை அனுப்பி வைத்தார் பாலசந்தர். அதன் பிறகு வெறும் இருபதே நாளில் தமிழை கற்றுக்கொண்டார் ரஜினி. அப்புறம் மீண்டும் கேபியை சந்திக்க சென்றார். அவரும் பார்த்து விட்டு ஓகே. நீ செலக்ட் ஆயிட்ட. ஆனால் உன் பெயரை மாற்றவேண்டும். உன் பெயரில் ஏற்கனவே இங்கொரு ஜாம்பவான் நடிகர் இருக்கிறார்.
மூன்று முடிச்சு டைட்டிலையே ரஜினி மேல் தான் போட்டார்கள்!
அதனால் நீயும் அதே பெயரில் வந்தால் எடுபடாது. சோ, உன் பெயரை மாற்றிக்கொள் என்ற போது நீங்களே ஒரு பெயர் சொல்லுங்க சார் என்றார் சிவாஜிராவ். அப்போது தான் ரஜினிகாந்த் என்று பெயர் வைத்துள்ளார் கேபி. அந்த நாள் பௌர்ணமி மற்றும் ஹோலி பண்டிகை தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்று ஆரம்பித்த ரஜினிகாந்த் என்ற புயல் இன்று வரை ஓயவில்லை. அதன் பிறகு அபூர்வ ராகங்கள் படத்தில் முதல் முறையாக திரையில் தோன்றினார். இருந்தாலும் அதில் ஒரு சின்ன கதாபாத்திரம் தான். அப்போது கேபியே சொல்லியிருக்கிறார். இது சின்ன கேரக்டர் என்று வருத்தப்படாதே! இது சிறிய கதாபாத்திரம் என்றாலும் கூட முக்கியமான கதாபாத்திரம் அதனால் நிச்சயமாக நீ பேசப்படுவாய். அதுமட்டுமல்ல, எனது அடுத்த படத்தில் உனக்கு நல்ல வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகு மூன்று முடிச்சு படத்தில் படத்தின் டைட்டிலையே ரஜினி மேல் தான் போட்டார் கேபி. அந்த படத்தில் வில்லனாக இருந்து கடைசியாக ரஜினி திருந்துவது போல் காட்சி அமைக்கப் பட்டிருக்கும். அப்புறம் ரஜினிகாந்த் தன்னுடைய கரியரில் வேகமாக வளர ஆரம்பித்தார். பிஸி நடிகரானார். ஸ்டார் ஆனார். சூப்பர்ஸ்டார் ஆனார். இன்று உலகமே கொண்டாடும் தலைவராக இருக்கிறார். அவர் வளர்ச்சி என்பது திரைத்துறையை சார்ந்தது மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையிலும் அவர் அடைந்த உயரத்தை இன்னொருவர் அடைய முடியாது என்பதே உண்மை. ஏனென்றால் தான் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்தோம் என்று ரஜினிக்கு நன்றாகவே தெரியும்!
அதனால் தான் அவர் ஆரம்ப காலம் முதலாகவே, தன்னால் முடிந்த உதவியை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகிறார். இன்னொரு முக்கியமான விஷயம் தான் செய்கின்ற உதவியை வெளியே சொல்லமாட்டார். இந்த குணத்தை நிறைய பேரிடம் பார்க்க முடியாது. தலைவர் இப்படி உதவி செய்வதில் தான் நிம்மதி என்று செய்து வருகிறார். அது மட்டுமல்லாது, தனது திரைப்படம் வெற்றியைடையவில்லை என்றால் பணத்தை திருப்பிக்கொடுத்தவரும் இவர் தான். உலகத்திலேய இதுபோல் செய்ய ஆளில்லை. இது போன்ற நல்ல விஷயங்கள் தான் இவரை நிஜ வாழ்க்கையிலும் உயத்திப் பிடிக்கிறது. இது போன்ற உதவிகள் ரஜினி செய்வதை கேள்விப்பட்ட கேபி, ஒருநாள் ரஜினியை பார்க்க வேண்டும் என்று வீட்டுக்கு வரசொன்னார்.
பாலசந்தரின் அறிவுரைகள்!
தனது குருவான, கேபி கூப்பிட்டதும் ரஜினி உடனடியாக அவரின் வீட்டுக்கு புறப்பட்டார். அங்கு கேபி ரஜினியை வரவேற்றார். வீட்டு மாடிக்கு சென்று இருவரும் பேசினார்கள். என்ன ரஜினி, நிறைய நல்லவிஷயங்கள் செய்யுற போல, கேள்விப்பட்டேன் என்று சொன்னார் பாலசந்தர். ஏதோ என்னால் முடிந்ததை செய்கிறேன் அவ்வளவு தான். சரி நீ செய். அது ஒன்றும் தவறான விஷயமல்லவே, நல்ல விஷயம்தானே. அதனால் தயங்காது செய். இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல தான் உன்னை வரச்சொன்னேன்.
என்ன விஷயம் சொல்லுங்க.
நீ இப்படி உதவி செய்யுற. இதையும் செய் வேண்டாம் என்று சொல்லவில்லை. இருந்தாலும் அன்னதானம் செய். அதுதான் தானத்தில் சிறந்த தானம்.
அன்னதானம் செய்தால் சகல சவுகரியங்களும் உனக்கு கிடைக்கும். பசியோடு வருபவர்கள், உன்னை மனதார வாழ்த்துவார்கள். அதனால் உனக்கு மேலும் நல்லதே நடக்கும் என்று சொன்னார் கேபி. இதனை கேட்ட தலைவர், சரி சார், நான் அப்படியே செய்கிறேன் என்று உறுதியளித்தார். அதன்படி தலைவர் இன்றுவரை ஏழை எளிய மக்களுக்கு தினசரி உணவு வழங்கி வருகிறார். அவர் லாரன்ஸ் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு, வாழ்நாள் மதிய உணவு செலவை ஏற்றுள்ளார். இதை நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறினார். அது மட்டுமல்லாது, தினசரி 750 மக்களுக்கு ரஜினி உணவளித்து வருகிறார். இது நிச்சயமாக நிறைய பேருக்கு தெரியாத தகவல் தான். இந்த தகவல் எனக்கு முன்னாலே தெரியும்.
எப்படி என்றால், நான் ஒரு தலைவரின் ஆபிஸுக்கு சென்றிருந்தேன், அப்போது தான் தெரிந்து கொண்டேன். நான் அங்கு அந்த நாள் சாப்பிட்டுவிட்டு தான் வந்தேன். அதைத்தான் சமீபத்தில் சித்ரா லக்ஷ்மன் பேட்டியில் கே பாலி கூறியுள்ளார். கேபாலி என்றால் யார் என்று யோசிக்கிறீங்களா? ரஜினியின் ஆசிரியர். நடிப்பு பயிற்சி பள்ளியில் பணிபுரிந்தவர். தலைவர் கேபி சாரின் அறிவுறையின்படி இந்த அன்னதானம் செய்து உதவுவதை இன்று வரையிலும் கடை பிடிக்கிறார். நாளையும் கூட கடைபிடிப்பார். ஏனென்றால் அவர் ரஜினிகாந்த். இது மட்டுமல்ல, ரஜினி இன்னொரு விஷயமும் இன்று வரை கடைபிடிக்கிறார் தனது குருவான கேபிசார் சொன்னதற்காக!
உண்மையை சொல்ல தயங்காத ரஜினி!
இந்த விஷயத்தை தலைவரே தான் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார். ரஜினிக்கு ஆரம்ப காலத்தில் மது அருந்தும் பழக்கம் இருந்தது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும். ஏனென்றால் நிறைய பேட்டியில் ரஜினியே கூறியுள்ளார். ஒரு முறை கேபியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு குளிர் பிரதேசத்தில் நடைபெற்றது. மாலை நேரம் வந்தது. படப்பிடிப்பு முடிவடைந்தது என்று சொன்னதால் ரஜினி குளிருக்கு இதமாக சற்று மது அருந்திவிட்டு அவரது அறையில் ஓய்வெடுத்துள்ளார்.
திடீரென்று ரஜினியின் உதவியாளர் ஓடி வந்து பாலசந்தர் சார் வரசொன்னார் என்று கூறினார். ரஜினிக்கோ தூக்கி வாரிப்போட்டது. என்ன இந்த நேரத்தில் கூப்பிடுகிறாரே என்று சற்று பயந்து, பேஸ்ட்டால் பல் துலக்கிவிட்டு சென்ட் அடித்துக்கொண்டு புறப்பட்டார். கேபியிடம் சற்று தள்ளி நின்று தான் பேசினார். இருந்தாலும் பாலசந்தர் கண்டுபிடித்துவிட்டார். என்ன இந்த பழக்கம். அதுவும் படப்பிடிப்பு நடக்கும் போது. நான் இப்போது மாலை நேரத்தில் எடுக்க வேண்டிய காட்சி எடுக்க போகிறேன். நீ இந்த நிலையில் எப்படி நடிப்பாய்? என்று ரஜினியை வார்த்தையால் வதைத்தெடுத்தார்.
அன்று விட்டவர் தான். அதன் பிறகு சூட்டிங் இருக்கும் நாளில் மறந்தும் கூட ரஜினி மதுவை தொடுவதில்லை. இது தலைவர் ரஜினியின் உயர்ந்த குணம். தனது குரு சொன்னதை இன்று வரைக்கும் கடைபிடிக்கிறார் சிஷ்யன். இதுமட்டுமல்ல, இது போன்ற விஷயங்களை அசால்டாக பொது வெளியில் தலைவர் சொல்கிறார். அப்போது எந்த அளவுக்கு அவர் உண்மை தன்மையுடன் நடந்து கொள்கிறார் என்று யோசித்துப்பாருங்கள். அதுவும் இந்தியாவே கொண்டாடும் ஒரு சூப்பர்ஸ்டார் இது போன்ற விஷயங்களை வெளியில் சொல்கிறார். உண்மையிலேயே இதனால் இவரை எல்லோருமே கொண்டாடுகிறார்கள்.
குரு சொன்னதை கடைபிடிக்கும் சிஷ்யன்!
ஒரு சின்ன நடிகர் கூட இது போன்ற விஷயங்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் தன்னுடைய இமேஜ் பாதிக்கப்படும் என்று நினைப்பார்கள். ஆனால் தான் இப்படி தான் என்று ரஜினி உறுதியாக இருக்கிறார். எந்த சூழ்நிலையிலும் நான் உண்மையை தான் பேசுவேன் என்று தலைவர் தெளிவாக இருக்கிறார். இதனால் தான் இவரை திரையில் மட்டுமல்லாமல் தரையிலும் கொண்டாடுகிறார்கள். எனக்கு தெரிந்து உண்மை எனும் சொல்லுக்கு உருவம் கொடுக்க வேண்டும் என்றால் நிச்சயமாக ரஜினியின் உருவத்தை தான் காட்டவேண்டும்.
இவ்வாறாக தனது குருவான பாலசந்தர் சொன்ன இரண்டு விஷயங்களை இன்றளவும் கடைபிடித்து வருகிறார். இது தான் தலைவர் ரஜினிகாந்த் தனது குருவான கேபி அவர்களுக்கு தரும் உயர்ந்த மரியாதையாக தான் பார்க்கிறேன். குரு சிஷ்யன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நமக்கெல்லாம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் தான் இந்த இருவர். கேபி மற்றும் ரஜினி. எத்தனை வருடங்கள் ஆனாலும் இவர்கள் புகழ் நிலைத்து நிற்கும். ஏனென்றால் குருவுக்கு கிடைத்த சிஷ்யன் அப்படி!!

கருத்துகள் இல்லை