நடிகர் திலகம் சிவாஜிகணேசனும்! சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும்!
சிவாஜியால் ஈர்க்கப்பட்ட ரஜினி!
ரஜினிகாந்த் சினிமா படங்களில் நடிப்பதற்கு முன்னதாகவே சிவாஜியின் தீவிர ரசிகராக இருந்துள்ளார். அவர் படங்கள் வெளியாகும் போது எப்படியாவது தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விடுவார். கையில் பணம் இல்லையென்றாலும் கூட தனது நண்பர்களிடமாவது வாங்கி சிவாஜி படங்களை பார்த்துள்ளார். அந்த அளவுக்கு அந்த மகா நடிகர் இந்த மகா ரசிகரை ஈர்த்துள்ளார். இதனை ரஜினி எங்கேயும் சொன்னதில்லை. ஆனால் அவரின் நண்பரான ராஜ் பஹதூர் ஒரு பேட்டியில் இந்த செய்தியை வெளியிட்டிருந்தார். சிவாஜிகணேசன் ரசிகனாக தான் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார் ரஜினிகாந்த். அதன் பிறகு நடிகரான பிறகும் கூட சிவாஜி மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை நாடறியும்.
முதலாவதாக ஒரு விஷயம் சொல்கிறேன். ரஜினிகாந்த் நடித்த பைரவி என்ற படம் வெளியான போது கலைப்புலி தானு சூப்பர்ஸ்டார் பட்டத்தை ரஜினிக்கு வழங்கினார். அந்த சூப்பர்ஸ்டார் பட்டத்தை வைத்து சென்னை முழுவதும் கட்டவுட் வைத்தார். இதனை பார்த்த ரஜினிக்கோ தூக்கிவாரிப்போட்டுவிட்டது. எம்ஜிஆர் சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் போது எனக்கு சூப்பர்ஸ்டார் பட்டமா? என்று நினைத்தார். இந்த பட்டம் எனக்கு வேண்டாம் என்று கலைஞானத்திடம் சொல்லி தானுவிடம் சூப்பர்ஸ்டார் என்று விளம்பரப்படுத்துவதை நிறுத்த சொல்லுங்க என்று கூறினார் ரஜினிகாந்த். ஆனால் அதற்குள் இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவியது. மக்கள் மத்தியில் சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான் என்று பதிந்துவிட்டது.
போஸ்டரில் சூப்பர்ஸ்டார் என்பதை நீக்கிவிடலாம். ஆனால் மக்கள் மனதில் பதிந்த சூப்பர்ஸ்டாரை என்ன செய்ய முடியும்? அதன் பிறகு அந்த பட்டத்தை தனது படங்களில் போட ரஜினி அனுமதிக்க வில்லை. பல வருடங்கள் கழித்து நான் போட்ட சவால் என்ற படத்தில் தான் முதன் முதலாக சூப்பர்ஸ்டார் என்று போடப்பட்டது. இதை நான் இங்கே சொல்வதற்கான காரணம் என்னவென்றால், பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் ரஜினிக்கு நிகர் ரஜினியே தான். சிவாஜி கணேசன் போன்ற லெஜன்ட் நடித்துக்கொண்டிருக்கும் போது நமக்கு எதுக்கு இந்த பட்டம் என்று ரஜினிகாந்த் முடிவெடுத்திருந்தார். இத்தனைக்கும் அவர் நடிப்பில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த போது நடந்த விஷயம் தான் இது.
சிவாஜி தான் சூப்பர்ஸ்டார்! சொன்னது ரஜினி!
ரஜினிகாந்த் மற்றும் சிவாஜிகணேசன் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ளனர். நான் வாழ வைப்பேன், ஜஸ்டிஸ் கோபிநாத், படிக்காதவன், விடுதலை, படையப்பா இப்படி பல படங்களில் சிவாஜியும் ரஜினியும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். நான் வாழ வைப்பேன் படத்தில் ரஜினியின் நடிப்பைப் பார்த்து சிவாஜியே ஆச்சர்யப்பட்டாராம். அந்த அளவுக்கு அந்த படத்தில் சூப்பராக நடித்திருப்பார் நமது சூப்பர்ஸ்டார். விடுதலை படத்தில் சிவாஜி கணேசனுக்கு தக்க மரியாதை கொடுத்திருப்பார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு பாடல் காட்சி வரும். நாட்டுக்குள்ள நம்மப்பத்தி கேட்டுப்பாருங்க என்று. அந்த பாடலில் ரஜினியும் விஷ்னுவர்தனும் மாறுவேடத்தில் நடித்திருப்பார்கள். சிவாஜி போலீஸாக வருவார். அந்த காட்சியை நிறையபேர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அடுத்த முறை கவனித்து பாருங்கள்.
அந்த பாடல் முடியும் போது, நாட்டுக்குள்ள நம்மப்பத்தி கேட்டுப்பாருங்க, அம்மம்மா இவர் தான் சூப்பர்ஸ்டாருங்க என்ற வரிகள் வரும்போது, ரஜினி சைகையால் செய்து காட்டுவார். நான் இல்லை சூப்பர்ஸ்டார் சிவாஜிசார் தான் என்று. சிவாஜிக்கு நேராக ஆள்காட்டி விரலை நீட்டுவார். இந்த காட்சியை பார்க்காதவர்கள் அந்த பாட்டில் இதை அடுத்த முறை பார்க்கும் போது கட்டாயம் பாருங்கள். இந்த மாதிரி ஒரு சின்ன விஷயத்தில் கூட அவருக்கு எந்த வித மரியாதை குறைவும் வந்துவிடக்கூடாது என்று ரஜினி யோசித்துள்ளார். அடுத்ததாக, அந்த ஏர்போர்ட் செய்தி உங்களுக்கு தெரிந்திருக்கும்! ஏனென்றால் ரஜினியே இதை ஒரு மேடையில் சொன்னார். இருந்தாளும் தெரியாதவர்களும் இருப்பார்கள் அல்லவா? அதனால் தெரியாதவர்களுக்காக இதை சொல்கிறேன்!
தலைவர் கோயமுத்தூர் ஏர்போர்ட்டுக்கு ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். அப்போது அதே ஏர்போர்டில் சிவாஜி சாரும் இருந்துள்ளார். இது அண்ணாமலை படம் வெளியான போது நடந்த ஒரு சம்பவம். ரஜினி ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் அந்த ஏர்போர்ட்டை சூழ்ந்து விட்டார்கள். ரஜினி வருவதை எப்படியோ அவர்கள் அறிந்து இருந்துள்ளனர். கூட்டம் கூடி தலைவா தலைவா என்று பெருங்கூச்சல் போடுகிறார்கள். தலைவருக்கோ தர்ம சங்கடமாக இருந்துள்ளது.ஏனென்றால் சிவாஜி சார் அருகில் இருக்கின்ற போது அவரை புகழ்கிறார்களே என்று ரஜினிக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்துள்ளது. அப்போது சிவாஜி அவர்கள் கூறியுள்ளார். என்ன நெழியுற? இதெல்லாம் உன் ரசிகர்கள் தானே! உன்னைத்தானே தலைவா என்று சொல்றாங்க? நீ கண்டுக்காம போற? என்று கேட்டுள்ளார்.
அதோடு நில்லாமல், அதோ அங்க கைக்காட்டு இங்க கைகாட்டு வணக்கம் சொல்லு என்று ரஜினியிடம் கூறினார். இது உன்னுடைய காலம். எங்க காலம் முடிஞ்சு போச்சு. இனி நீதான் என்று சிவாஜி ரஜினியின் கையை பற்றிக்கொண்டு சொன்னார். பின்னர் அங்கே இருந்து முதலில் ரஜினியை கிளம்ப சொல்லி விட்டு அதன் பிறகு சென்றுள்ளார் சிவாஜி. என்ன ஒரு பக்குவம் பாருங்கள். இந்த மாதிரி ஒரு சிலரை தான் பார்க்கமுடியும். சிவாஜி அவர்களுக்கு ஒரு காலத்தில் எத்தனை ரசிகர்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அப்படி இருக்கும் ஒருவர் இது போல் செய்கிறார் என்றால் அவருக்கு ரஜினிமேல் உள்ள அன்பு பாசம் எத்தகையது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இருவருமே அதுபோல தான். சிவாஜிகணேசன் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்தார் ரஜினிகாந்த்.
சிவாஜி தான் ரஜினிகாந்த்! ரஜினிகாந்த் தான் சிவாஜி!
இன்னொரு சுவையான நிகழ்வும் உண்டு. ரஜினியின் இயற்பெயர் சிவாஜிராவ். ஏற்கனவே சிவாஜி என்ற நடிகர் தமிழ் சினிமாவில் கால் பதித்து விட்டார் என்று சிவாஜிராவுக்கு ரஜினிகாந்த் என பெயர் சூட்டினார் கே.பாலசந்தர். ஆனால் அதற்கு முன்பாகவே நடிகர் திலகம் ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கவுரவம் படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற பெயரில் சிவாஜி நடித்திருப்பார். அந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு சூப்பர்ஸ்டாரும் சிவாஜி என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே சிவாஜி குடும்பத்தாரிடம் இப்படி நடிக்கப்போகிறேன் என்று அனுமதி வாங்கி விட்டு தான் நடித்தாராம் ரஜினிகாந்த்!
தலைவருடன் நடிகர் திலகம் இணைந்து நடித்த மெகா ஹிட்டான படம் தான் படையப்பா. இந்த படம் தான் சிவாஜிக்கு கடைசிப்படமாக அமைந்து விட்டது. இந்த படத்தில் நடிப்பதற்கு சிவாஜிகணேசனை அழைந்தார் ரஜினி. அவரும் இந்த படையப்பா படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சிவாஜி கணேசன் அவர்களின் சம்பளமாக ஒரு கோடி ரூபாய் கொடுத்தார் ரஜினிகாந்த். ஆனால் அது வரை சிவாஜிக்கு யாரும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததில்லை. அதனால் சிவாஜி ரஜினியிடம், ஏன்பா இவ்வளவு பணம் கொடுக்கிறாய்? நான் அந்த அளவுக்கு ஒன்னும் நடிக்கவில்லையே என்று சொன்னார். அதற்கு ரஜினி சொன்னார், இந்த காலத்தில் யார் யாரோ கோடியில் சம்பளம் வாங்குகிறார்கள். நீங்கள் நடிகர் திலகம், மிகப்பெரிய ஜாம்பவான் நீங்கள் கோடியில் சம்பளம் வாங்குவது தான் நியாயம் என்று தலைவர் ரஜினி சொன்னாராம். இதைக்கேட்ட சிவாஜியோ நெகிழ்ந்து போனாராம்.
நான் வாழ வைப்பேன் படம் வெளியான போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகர் சிவக்குமார் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார். அவர் என்ன சொல்கிறார் என்று எழுதுகிறேன். மேட்டூரில் ஒரு தியேட்டரில் நான் வாழ வைப்பேன் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. நான் அந்த திரைப்படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றேன். அங்கு ஹவுஸ்புல் போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. நான் அந்த தியேட்டரின் மேனேஜரிடம் பேசி ஒரு டிக்கெட் வாங்கிகொண்டு தியேட்டருக்குள் சென்றால் எல்லா சீட்டும் காலியாக இருக்கிறது. என்ன, வெளியே ஹவுஸ்புல் போர்டு போட்ருக்காங்க. மேனேஜரும் எல்லா டிக்கெட்டும் விற்று தீர்ந்துவிட்டது என்று சொன்னார். ஆனால் தியேட்டருக்குள் ஒரு ஆளையும் காணமே என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சரி என்று படத்தை பார்த்து வந்தேன்.திடீரென்று ஒரு மிகப்பெரிய கூட்டம் முந்தியடித்துக்கொண்டு தியேட்டருக்குள் வந்தது. இடம் பிடித்து இருக்கைகளில் அமர்ந்தது அந்த கூட்டம். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
சற்று நேரம் கழித்து தான் எனக்கு உண்மை நிலவரமே தெரிந்தது. ரஜினி வரும் காட்சிக்கு முன்பாக எல்லோரும் ஓடிவந்து இடம் பிடித்துக்கொண்டனர். ரஜினி வரும் காட்சிகளில் கைத்தட்டல்களும் விசில் சத்தமும் அரங்கையே அதிரவைத்தது. அப்போது தான் இது எனக்கு புரிந்தது. இந்த கூட்டம் அவ்வளவு நேரம் காத்திருந்து ரஜினிக்காக வந்த கூட்டம் என்று. இவ்வாறு அந்த டைரிக்குறிப்பில் சிவக்குமார் எழுதியிருந்தார். அந்த படத்தின் விமர்சனங்கள் பத்திரிக்கையில் வெளியான போது சிவாஜியை விட ரஜினிக்கு தான் அதிக கைத்தட்டல்கள் கிடைத்தது என்று எழுதினர். அந்த படத்தில் சூப்பராக தனது ஸ்டைல் மாஸ் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்திருப்பார் ரஜினிகாந்த்.
ரஜினி கேரக்டரில் நான் நடித்திருக்க வேண்டும்!- சிவாஜி
நான் வாழ வைப்பேன் என்ற திரைப்படத்தின் இயக்குநரிடம் சிவாஜியே ரஜினி நடித்த கேரக்டரில் தான் நான் நடித்திருக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டாராம். அந்த அளவுக்கு அந்த கேரக்டர் இன்றளவும் நின்று பேசும் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது. ரஜினிகாந்த் என்று சொன்னாலே முதலில் நமக்கு நியாபகத்துக்கு வருவது அவருடைய ஸ்டைல் தான். அதனால் அவரை ஸ்டைல் மன்னன் என்று அழைப்பதுண்டு. ஆனால் அவர் ஸ்டைல் சக்ரவர்த்தி என்று சிவாஜியை தான் குறிப்பிடுகிறார். ஒருமுறை இருமுறை அல்ல. பல இடங்களில் இது போல கூறியுள்ளார். சிவாஜி கணேசன் மறைந்த பிறகும் கூட அவரது குடும்பத்தினர் மீது மாறா அன்பு கொண்டுள்ளவர் நமது சூப்பர்ஸ்டார்.
சந்திரமுகி படத்தின் மூலமாக நல்ல வருவாயை சிவாஜியின் மகன்களுக்கு ஈட்டிக்கொடுத்தார். உண்மையை சொல்லப்போனால் அந்த படம் வெளியான போது ரொம்ப டென்ஷனாக இருந்தது ரஜினிகாந்த் தான். ஏனென்றால் முந்தைய படமான பாபா சரியாக வியாபாரம் ஆகவில்லை. அதனால் ஒரு சிலர் அப்படி இப்படி பேசியிருக்கிறார்கள். இதெல்லாவற்றுக்கும் மேல், நான் யானை இல்லை குதிரை விழுந்தா டக்குன்னு எந்திரிப்பேன் என்று ரஜினியே மேடையில் பேசியிருந்தார். மக்களுக்கு படம் பிடித்தால் தானே வெற்றியடையும். அதனால் தான் அவருக்கு டென்ஷன்.
ஆனால் எதிர்பார்த்ததை விட சந்திரமுகி படம் பிரம்மாண்டமான வெற்றியையும் பெற்றது. சொல்லி அடித்தார் தலைவர். அந்த படம் 800 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது. தலைவரும் மேடையில் சிவாஜி அவர்களைப்பற்றி பேச வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசிவருகிறார். இன்னொருவிஷயம் சொல்ல மறந்து விட்டேன் பாருங்க. துடிக்கும் கரங்கள் படத்திற்காக ரஜினிக்கு 81 அடி கட்டவுட் வைக்க முடிவு செய்கிறார்கள். ரஜினியிடம் இது பற்றி சொன்னபோது ஏன் 81 அடி என்று வைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், சிவாஜி சாருக்கு வணங்காமுடி படத்திற்காக 80 அடியில் வைததுள்ளார்கள். 81 அடி கட்டவுட் இதுவரை யாருக்கும் வைக்க வில்லை. அதனால் தான் நாம் வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம் என்று சொன்னார்கள்.
இதனைக் கேட்ட ரஜினிகாந்த், கூடவே கூடாது என மறுத்துவிட்டார். சிவாஜி கணேசன் அவர்களை விட பெரிய கட்டவுட் எனக்கு வைக்க வேண்டாம். நான் என்றுமே அவரை விட சிறியவன் தான். என்று தலைவர் சொல்லி அவர்களை அனுப்பி விட்டார். அதன் பிறகு தான் வணங்காமுடிக்கு வைத்த அதே 80 அடியில் துடிக்கும் கரங்கள் படத்திற்கும் வைக்கப்பட்டது. இது தான் ரஜினிகாந்த். அந்த காலகட்டத்தில் ரஜினியும் டாப்பில் தான் இருக்கிறார். இருந்தாலும் சிவாஜி சாரைவிட அதிகமான உயரத்தில் கட்டவுட் வைக்க வேண்டாம் என்று சொல்வதெல்லாம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. தலைவர் என்றுமே இப்படி தான். அவர் மனதுக்கு என்றும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வாழவேண்டும். எந்த குறையும் அவரை நெருங்காது.!

கருத்துகள் இல்லை